
Rebecca
Feb 5, 2026
உள்ளூர்
வீட்டையே இழந்து நிற்போர் எந்தக் கூரையில் சுதந்திர கொடியை ஏற்றுவர்? - சுதந்திர உரையில் திலகர் கேள்வி

இலங்கையில் சுதந்திரத் தினத்தன்று வீட்டுக் கூரைகளில் சுதந்திர கொடியேற்றும் ஒரு வழக்கம் உள்ளது. அதே நேரம் தித்வா புயல் அனர்த்தத்தால் வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் வாழ்கின்றனர். அவர்களுக்கான மறு வதிவு செயற்பாடுகளின் போது மலையகத் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. அவர்களுக்கு வீடுகளே இல்லாதபோது எங்கே கொடி ஏற்றுவார்கள்? அதனால்தான் அவர்களை ஒன்றுதிரட்டி அனர்த்தம் நடந்த சூழலில் தேசிய கொடியேற்றி கவனயீர்ப்பு செய்கிறோம் என
மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
மலையக அரசியல் அரங்கத்தின் சார்பில் "நாங்களும் இலங்கையர்களே" எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வு இடம் பெற்றது. மலையக அரசியல் அரங்கத்தின் வட்டகொட வட்டார அமைப்பாளர் ராஜா தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
இலங்கை சுதந்திரமடைந்த அதே ஆண்டில் இலங்கையில் குடியுரிமை நீக்கப்பட்டு சுதந்திரம் பறிக்கப்பட்ட மலையக மக்கள் நாற்பதாண்டுகள் போராடி தம்மை இலங்கையில் 'இலங்கையர்களாக' குடியுரிமையை பெற்றெடுத்தனர். அப்படியாக இலங்கையில் 'இலங்கையர்கள்' என்பதை போராடி வென்றவர்கள் மலையக மக்கள் மட்டுமே. எனவே சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கும் அத்தனைத் தகுதியும் அவர்களுக்கு உண்டு. அதே நேரம் தமது முன்னோர் போராடிப் பெற்ற குடியுரிமையை அர்த்தமுள்ள குடியுரிமையாக வென்றெடுக்க வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் இன்றைய இளைய தலைமுறைக்கு உண்டு.
தித்வா புயல், மண் சரிவு அனர்த்தத்திற்கு பின்னதான நிவாரண, மீள் கட்டமைப்பு செயற்பாடுகளுக்காக அரசாங்கம் விடுத்துள்ள சுற்று நிரூபங்கள், வர்த்தமானிகள் எல்லோருக்கும் பொதுவானது. ஆனாலும் அத்தகைய ஏற்பாடுகள் மூலம் மலையகத் தமிழ்மக்கள் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதில் பல தடைகள் காணப்படுகின்றன. இது இலங்கையில் மலையக மக்கள் பாரபட்சமாக நடாத்தப்படுகிறார்கள் என்பதற்கான சிறந்த உதாரணமாகும்.
இலங்கையில் சுதந்திரத் தினத்தன்று வீட்டுக் கூரைகளில் சுதந்திர கொடியேற்றும் ஒரு வழக்கம் உள்ளது.
மலையக மக்களில் பெரும்பாலானவர்கள் வீடுகள் இல்லாமல் லயன் முறைமையிலேயே வாழ்கிறார்கள். அதே நேரம் தித்வா புயல் அனர்த்தத்தால் இருந்த வீடுகளையும் இழந்த மக்கள் முகாம்களில் வாழ்கின்றனர். அவர்களுக்கான மறு வதிவு செயற்பாடுகளின் போது மலையகத் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. அவர்களுக்கு வீடுகளே இல்லாதபோது எங்கே கொடி ஏற்றுவார்கள்? அதனால்தான் அவர்களை ஒன்றுதிரட்டி அனர்த்தம் நடந்த சூழலில் தேசிய கொடியேற்றி மலையகத் தமிழ் மக்களாகிய நாங்களும் இலங்கையர்களே எங்களை பாரபட்சமாக நடாத்த வேண்டாம் எனும் கோரிக்கையை அரசாங்கத்துக்கும் ஏனைய தரப்புகளுக்கும் முன்வைக்கின்றோம் என குறிப்பிட்டார்.
மலையக அரசியல் அரங்கத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் மேற்படி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






