
Rebecca
Feb 16, 2026
உள்ளூர்
சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை - நீதிமன்ற நடவடிக்கைகள் புறக்கணிப்பு

வவுனியா
சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியாவிலும் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே குறித்த புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக சட்டத்தரணிகள் சங்கத்தினர் நேற்று தெரிவித்திருந்தனர்.
இதற்கு ஆதரவாக இன்று திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்து சட்ட தரணிகள் இன்றை தினம் தமது கடமைகளில் இருந்து விலகியிருந்தனர்.
இதன் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பித்திருந்தன இதில் வழக்கறிஞர்கள் கருப்புக் கொடியை ஏற்றி நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகிருந்தனர்.
விசாரணைக்கு வந்திருந்த வழக்குகளில் வழக்கறிஞர்கள் முன்னிலை ஆகாத காரணத்தால் அனைத்து வழக்குகளையும் வேறு திகதி வழங்கி இது தொடர்பான வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு
கொழும்பில் சட்டத்தரணியொருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் படுகொலைசெய்த கொலையாளிகளை கைதுசெய்து சட்டத்தினை நிலைநாட்டுமாறு கோரியும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து சட்டத்தரணிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் இன்றைய தினம் நீதிமன்ற கடமைகளிலிருந்து விலகி இன்றைய தினம் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
சட்டத்தரணிகள் உட்பட பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலைமை உருவாகும் சூழ்நிலையேற்பட்டுள்ளதன் காரணமாக துப்பாக்கிதாரிகள் கைதுசெய்யப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக ஒன்றுகூடிய சட்டத்தரணிகள் அமைதிமுறையில் போராட்டத்தினை நடாத்தினார்கள்.
மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் தியாகேஸ்வரன் தலைமையில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சட்ட ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதுடன் சட்டத்தரணிகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


கல்முனை
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில் அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட துயரச்சம்பவத்தை கண்டித்து இன்று கல்முனை நீதிமன்ற வளாகம் முன்பாக அமைதியான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கல்முனை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்கான விசேட பொதுக்கூட்டம் இன்று கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற பின்னர் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் கருப்பு பட்டி அணிந்த சட்டத்தரணிகள், “சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படுக”, “சட்டத்தரணிகளுக்கு பாதுகாப்பு வழங்குக” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும், அதனை பிரதிபலிக்கும் பதாகைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் சட்டத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். சட்டத்தரணிகள் தங்களது தொழில்பணிகளை அச்சமின்றி மேற்கொள்ளக்கூடிய பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என கல்முனை கிளை தலைவி, சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர் இதன்போது வலியுறுத்தினார்.
“ஒரு சட்டத்தரணி மீது நடத்தப்படும் தாக்குதல், முழு நீதித்துறையின்மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது அரசின் பொறுப்பாகும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான துரிதமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை அவசியம்,” என அவர் இங்கு குறிப்பிட்டார்.
இந்நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உறுப்பினர்களான சட்டத்தரணிகள், இன்று (பிப்ரவரி 16) நாடு முழுவதும் எந்தவொரு வழக்குகளுக்கும் நீதிமன்றங்களில் ஆஜராகாமல் இருக்க தீர்மானித்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தீர்மானம் கொழும்பில் நேற்று நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்க விசேட பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதுடன் சட்டத்துறையின் பாதுகாப்பும் சுயாதீனத்தன்மையும் குறித்து எழுந்துள்ள அச்சங்களை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






