Search

admin

Jul 7, 2026

உள்ளூர்

பல்துறை விசாரணைகள் தீவிரம் – அமைச்சரவை பேச்சாளர் முக்கிய தகவல்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது பல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சிறைச்சாலைகள் ஆணையாளரும் கலந்துகொண்டிருந்ததுடன், குறித்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு தேவையான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்ததா என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர். 

இருப்பினும், இதற்கு பதிலளித்த சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், இது தொடர்பாக தமக்கு எந்தவொரு புலனாய்வு தகவலும் முன்கூட்டியே கிடைக்கவில்லை என்று கூறினார். 

சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள விதம் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ விளக்குகையில், 

"இந்தச் சம்பவம் குறித்து ஏற்கனவே பல பிரிவுகளின் கீழ் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி ஒருவர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய குழுவொன்றை நியமிக்க நேற்று அமைச்சரவையில் தீர்மானித்தோம். அத்தோடு, மினுவாங்கொடை பொலிஸாரும் கொழும்பு குற்றவியல் பிரிவினரும் தனியாக ஒரு விசாரணையை நடத்தி வருகின்றனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றுமொரு தனி விசாரணையை முன்னெடுத்து வருகிறது. மறுபுறம் சிறைச்சாலைத் தரப்பினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அனைத்து அறிக்கைகளின் மூலமே இறுதி வடிவில் இச்சம்பவம் குறித்த முழுமையான விபரம் வெளிச்சத்திற்கு வரும்." என்றார். 

புலனாய்வு தகவல்கள் தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், 

"அப்படியானதொரு புலனாய்வு தகவல் முன்னதாக கிடைத்திருக்கவில்லை... கைதிகளுக்கு இடையே அமைதியின்மை ஏற்படாத வண்ணம் தான் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவ்வாறு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்த காரணத்தினால் தான் சேதங்களை இந்த அளவிற்கு குறைத்துக் கொள்ள முடிந்தது. 

ஐந்தாம் திகதி மாலையாகும் போது இந்த நிலைமை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, கைதிகள் வார்டுகளுக்குள் அனுப்பப்பட்டு பூட்டப்பட்டு, உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டு அந்த நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டிருந்தன. மறுநாள் காலை என்பது திங்கட்கிழமை, அது நீதிமன்ற நடவடிக்கைகள் இருக்கும் ஒரு நாள்.. உணவு வழங்கி அந்தப் பணிகளை ஆரம்பிக்கவே அதிகாரிகள் தயாராகியிருந்தனர். அந்த நேரத்தில் தான், இந்தக் கைதிகள் போதை மாத்திரைகளை உட்கொண்டு சுயநினைவற்ற நிலைக்குச் சென்றிருந்தனர் என்பது தற்போது எங்களுக்கு தெரியவந்துள்ளது. அந்த கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தணிப்பதற்காக அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்த போதே அந்த இடத்திற்குச் சென்றுள்ளனர். 

வளாகத்தின் பாதுகாப்பிற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்தக் கைதிகள் போதை மாத்திரைகளைப் பயன்படுத்தியிருந்ததால் சுயநினைவற்ற நிலையில் இருந்தனர். பெண்களும் அவற்றை பயன்படுத்தியுள்ளனர். அவற்றை உட்கொண்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். டெங்கு நோய்க்கான அவசியமான சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு அங்கு வைத்தியர்கள் உள்ளனர், அவர்கள் வழமை போல அதனைப் பின்பற்றிச் செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, கடமையிலிருந்த அதிகாரிகள் தங்களது உயிரையும் பணையம் வைத்து தான் இதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்." என்றார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All