Search

Rebecca

Sep 2, 2025

உள்ளூர்

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கரிசனை கொண்டதாக இல்லை : வி.எஸ்.சிவகரன்

காற்றாலை மற்றும் கணிய மணல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்றைய தினம் (1) மன்னாரிற்கு வருகை தந்து, பொது அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடிய போதும், எங்களுடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவர்கள் கரிசனை கொண்டதாக இல்லை எனவும் அவர்கள் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளை தீர்த்து இங்கே காற்றாலைகளை எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து அவர்களுடைய கருத்துக்களும், வாதங்களும் அமைந்திருந்தது என பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று செவ்வாய்(2) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

காற்றாலை, கணிய மணல் விடயம் தொடர்பாக கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து உரையாடியதன் நிமித்தம் ஒரு மாத காலம் இடைநிறுத்தப்பட்ட வேலைத்திட்டம் தொடர்பாக நிபுணர்கள் குழு மன்னாரிற்கு விஜயத்தை மேற்கொண்டு சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அது சம்பந்தமான உரையாடல் ஊடாக தீர்மானத்திற்கு வரலாம் என ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் மின்சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் துறைசார் திணைக்களங்கள் குழுவாக நியமிக்கப்பட்டு,நேற்றைய தினம் திங்கட்கிழமை (1) மாலை மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் பொது அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் ஏற்கனவே அமைக்கப்பட்ட 30 காற்றாலைகளின் உடைய பிரச்சினைகள் தொடர்பாகவும், இனி அமைக்கப்படவுள்ள காற்றாலைகளால் ஏற்படவுள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பது தொடர்பில் அவர்களுடைய வாதங்கள் அமைந்திருந்தது.

எங்களுடைய கோரிக்கையாக இருந்த மன்னார் தீவு பகுதியில் காற்றாலை, கணிய மணல் திட்டத்தை முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்கிற விடயம் தொடர்பாக அவர்கள் அவதானம் செலுத்தியதாக இல்லை.

எங்களுடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவர்கள் கரிசனை கொண்டதாக இல்லை.அவர்கள் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளை தீர்த்து இங்கே காற்றாலைகளை எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து அவர்களுடைய கருத்துக் களும்,வாதங்களும் அமைந்திருந்தது.

எனினும் மக்களினுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு இடமாற்றத்தை ஏற்படுத்தி மக்களினுடைய வாழ்வாதார வாழ்வியல் இருப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குறித்த இரு திட்டங்களையும் மன்னார் தீவில் இருந்து வெளியே எடுப்பது சம்பந்தமாக அவர்களுடைய பார்வை இருக்கவில்லை.

எனவே இவர்களினால் பரிந்துரைக்கப்படுகிற அறிக்கை எவ்வாறு அமையப்போகிறது என்பது குறித்து எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது.இவர்களின் அறிக்கையில் பிரகாரமே ஜனாதிபதி இறுதி முடிவுக்கு வருவார் என அவர்கள் கூறுகிறார்கள்.

ஜனாதிபதி காற்றாலை வேலைத்திட்டத்தை ஒரு மாதம் நிறுத்தியது கூட கண்துடைப்பு நாடகம் என நான் ஏற்கனவே ஜனாதிபதி செயலகத்திற்கு முன் வைத்து ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தேன்.

அதேபோல் நிபுணர் குழுவும் எங்களுடைய பிரச்சினைகளை மாத்திரமே பேசுகின்றதோ தவிர எங்களுடைய கோரிக்கைகள், அடிப்படை உணர்வுகள் என்ன என்று அவர்கள் புரிந்து கொள்வதாக இல்லை.

அதில் உள்ள அதிகாரிகள் அத்தனை பேரும் ஏற்கனவே பல தடவைகள் மன்னாரிற்கு வந்தவர்கள். பல கூட்டங்களில் அவர்களுடன் பங்கு பற்றி உள்ளோம் .

அவர்களுக்கு எங்களுடைய பிரச்சனை என்ன என்று தெளிவாக தெரியும்.இந்த நிலையில் இந்த நிபுணர் குழுவில் புதியவர்களை இணைக்காது அவர்களை மீண்டும் இக் குழுவில் இணைத்திருப்பது எமக்கு சாதகமான பதில் கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

மன்னார் மக்களின் கூட்டு கோரிக்கை யாகிய காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகிய இரு திட்டங்களும் மன்னார் தீவு பகுதியில் இருந்து வெளியே கொண்டு போக வேண்டும் என்ற கோரிக்கை எவ்வாறான நிலைப்பாட்டில் போகப்போகிறது என்பது குறித்து எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

அரசு தனது நிறைவேற்று அதிகாரத்தையும்,பெரும்பான்மை ஆதரவையும் பயன்படுத்தி இத்திட்டங்களை அமுல் படுத்துமோ என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார், வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என். எம்.ஆலம் ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.



Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp