
admin
Jul 10, 2026
உள்ளூர்
மகாவிஹாரவங்சிக ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிகாயவின் 2026ஆம் ஆண்டுக்கான உபசம்பதா அரச நிகழ்வு.

மகாவிஹாரவங்சிக ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிகாயவின் 2026ஆம் ஆண்டுக்கான உபசம்பதா அரச நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் வரலாற்றுச் சிறப்புமிக்க களுத்துறை போதிக்கு அருகில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
இந்த உபசம்பதா நிகழ்வு நேற்று ( 9) முதல் ஜூலை 22ஆம் திகதி வரை களுத்துறை களு கங்கையில் அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளதுடன், இதில் 400க்கும் மேற்பட்ட இளம் பிக்குகள் கலந்துகொள்ள உள்ளனர்.
மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய இந்த அரச உபசம்பதா நிகழ்வு , இம்முறை ஒன்பது வருடங்களின் பின்னரே நடத்தப்படுகின்றமை ஒரு விசேட அம்சமாகும். கடந்த ஜனவரி மாதம் 01ஆம் திகதி, ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க வணக்கத்திற்குரிய கரகொட உயன்கொட மைத்ரிமூர்த்தி மகாநாயக்க தேரரைச் சந்தித்து புத்தாண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட போது, அவர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே, இந்த உபசம்பதா நிகழ்வை அரச அனுசரணையுடன் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, தற்போதைய அரசாங்கம் தனது ஆட்சியில் மகா சங்கத்தினரின் அறிவுரைகள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை எப்போதும் பெற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டார். அத்துடன், புத்த சாசனத்தின் நலனுக்காக அரசாங்கம் என்ற ரீதியில் செய்ய வேண்டிய அனைத்து தலையீடுகளையும் குறைவின்றி செய்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
ஸ்ரீலங்கா அமரபுர மகா நிகாயவின் மகா மஹோபாத்யாய மகாநாயக்க வணக்கத்திற்குரிய அஸ்ஸஜி தேரர் மற்றும் ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க வணக்கத்திற்குரிய கரகொட உயன்கொட மைத்ரிமூர்த்தி மகாநாயக்க தேரர் ஆகியோர் விசேட போதனை நிகழ்த்தினர்.
இதன்போது "அமரபுர சாஸ்த்ரிய சங்கிரஹய" நூலும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா அமரபுர மகா சங்க சபையின் பதில் தலைவர் வணக்கத்திற்குரிய மாகால்லே நாகித்த நாயக்க தேரர், ஸ்ரீ லங்கா அமரபுர மகா சங்க சபையின் பதிவாளர் வணக்கத்திற்குரிய பலபிட்டியே சிறிசீவலி நாயக்க தேரர் உள்ளிட்ட மகாநாயக்க, அனுநாயக்க தேரர்களும், ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ மகா நிகாயவின் அனுநாயக்க வணக்கத்திற்குரிய வலேபொட குணசிறி தேரர், ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ மகா நிகாயவின் பதிவாளர் வணக்கத்திற்குரியஅத்தங்கனே சாஸனரதன நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், களுத்துறை மாவட்டச் செயலாளர் எச். எம். எஸ். பி. ஹேரத் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், ஸ்ரீ லங்கா அமரபுர மகா சங்க சபையின் தலைவர் அஜித் த சொய்சா, பொருளாளர் தம்மிக சமரவிக்ரம, களுத்துறை போதி நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர் அசான் த சொய்சா மற்றும் அமரபுர மகா சங்க சபையின் நிர்வாக சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






