Search

Rebecca

Nov 30, 2025

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் காலை வேளை குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதன் பிரகாரம் இன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர், தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் ஆடியபாதம் வீதி ஊடாக தனது வீடு நோக்கி பயணித்த வேளை பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில், திருநெல்வேலி சந்தியை அண்மித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் அடங்கிய வன்முறை கும்பல் அவர்களின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து, பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர்.

தாக்குதல்தாரிகளிடம் இருந்து உயிரை காக்க வாள் வெட்டு காயங்களுடன் வீதியில் சுமார் 50 மீட்டர் தூரம் ஓடி சென்றவரை, தாக்குதல்தாரிகள் துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர்.

ஓடி சென்றவர் வர்த்தகநிலையம் ஒன்றின் முன்பாக விழுந்த போது, துரத்தி வந்த நால்வரும் சரமாரியாக வாள்வெட்டினை மேற்கொண்டதில், இளைஞனின் கால் ஒன்று கணுக்காலுடன் துண்டாட்டப்பட்டுள்ளது. அதனை அடுத்து தாக்குதல்தாரிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, நோயாளர் காவு வண்டியில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தியசாலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்பகை காரணமாகவே கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களில் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp