Search

admin

Jun 29, 2026

உள்ளூர்

எரிசக்தி மற்றும் உலக வர்த்தக பாதிப்பால் வருமான இலக்குக்கு சவால்!

2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டில் இலங்கையின் ஒட்டுமொத்த அரச வருமானம் குறையும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

2027ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட நிதி மூலோபாய அறிக்கையின்படி, மானியங்கள் உள்ளடங்கலான ஒட்டுமொத்த அரச வருமானம் 2025ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.7 சதவீதமாகக் காணப்பட்டதுடன், அது 2026ஆம் ஆண்டில் 15.8 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், ஒருமுறை மாத்திரம் கிடைக்கப்பெற்ற வரி வருமான அதிகரிப்பைத் தொடர்ந்து, வருமான சேகரிப்பு சாதாரண நிலைக்குத் திரும்பியமையே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி காலத்தில் அரச வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.4 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்திருந்ததுடன், அது உலகிலேயே மிகக் குறைந்த மட்டங்களில் ஒன்றாக அமைந்திருந்ததாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட வரி ஆளுமைக் கொள்கைகள் மற்றும் வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் காரணமாக வரி அடிப்படை விரிவடைந்துள்ளதுடன், வரி ஏய்ப்பு மற்றும் வரி இழப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், மத்திய கிழக்கின் புவிசார் அரசியல் சூழ்நிலைகள், உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி சந்தையில் ஏற்படக்கூடிய தடங்கல்கள் காரணமாக, எதிர்காலத்தில் அரச வருமான இலக்குகளைத் தக்கவைத்துக் கொள்வது சவாலாக அமையலாம் எனவும் நிதி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All