Search

admin

May 24, 2026

உள்ளூர்

தென்மேற்கு இலங்கையில் மீண்டும் கனமழை எதிர்பார்ப்பு

எதிர்வரும் மே 26 அல்லது 27 ஆம் திகதிகளில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை நாட்டை வந்தடையக்கூடும் என்பதால், அந்த நாட்களில் நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


இதேவேளை, கடந்த நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக அதிகரித்திருந்த பல பிரதான ஆறுகளின் நீர்மட்டம் தற்போது வழமைக்குத் திரும்பிக்கொண்டிருப்பதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.


தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வந்தமையினால், கடந்த நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் பலத்த மழை பெய்திருந்தது. சில பகுதிகளில் 200 முதல் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்ததால், பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. எனினும், நேற்று (23) பலத்த மழை பெய்யாததால் ஆறுகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருகின்றது.


இதன்படி, களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் இன்று (24) முற்பகல் 9.30 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், களு கங்கையின் மில்லகந்தை பகுதியில் இன்னமும் சிறியளவிலான வெள்ள நிலைமை காணப்படுகிறது. களு கங்கையின் கிளையாறான குடா கங்கையின் மில்லகந்தை நீர்மானி இன்று முற்பகல் 8 மணிக்கு 6.51 மீற்றராகப் பதிவாகியிருந்தது. இதன் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வந்தாலும், அது இன்னமும் அனர்த்த மட்டத்திலேயே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதன் காரணமாக, ஹொரணை - பெல்லபிட்டிய பகுதியைச் சுற்றியுள்ள தாழ்நிலங்கள் இன்னமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், புளத்சிங்கள - களுத்துறை வீதி தீயகடுவ பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், களு கங்கையின் நீர்மட்டம் புட்டுபாவுல மற்றும் எல்லகாவ ஆகிய பகுதிகளில் இன்னமும் அவதானிக்கப்பட வேண்டிய மட்டத்திலேயே உள்ளது.


இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் குறைவடைந்து வந்தாலும், துனுமலே சுற்றியுள்ள மக்கள் இன்னமும் விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. அத்தனகலு ஓயா வான்பாய்ந்ததால் ஜா-எல, பாரிஸ் பெரேரா மாவத்தை மற்றும் சுதுவெல்ல ஆகிய பகுதிகளில் உள்ள பல வீடுகள் இன்னமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட 'டித்வா'  புயலினால் சேதமடைந்த பாரிஸ் பெரேரா மாவத்தையின் ஆரம்பப் பகுதியில் உள்ள கால்வாய் பக்கச்சுவர் இதுவரை புனரமைக்கப்படாததே இந்த வெள்ளத்திற்குக் காரணம் என பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறான பின்னணியில், ஜா-எல, ஸ்வர்ணஹங்ஸ பொடி எல பாலம் நேற்று (23) மாலை உடைந்து விழுந்துள்ளது. அத்துடன், ஜா-எலவிலிருந்து கம்பஹா நகரம் வரையான பிரதான பஸ் வீதி, யக்கடுவ பகுதியில் இன்னமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.


இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலையினால் இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 491 குடும்பங்களைச் சேர்ந்த 1,731 பேர் 18 பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தத்தினால் 836 வீடுகள் பகுதியளவிலும், 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.


தற்போதைய வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி கசுன் பெஸ்குவல் கருத்துத் தெரிவிக்கையில், "இன்றைய தினத்தைப் போன்றே நாளைய தினமும் சாதாரண வானிலையே நிலவும். எனினும், மே 26, 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இலங்கையின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி சற்றே அதிகரிக்கக்கூடும். அந்த நாட்களில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை முழுமையாக நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All