Search

admin

May 30, 2026

உள்ளூர்

அரச சொத்துக்கள் இனி முதலீட்டுக்கு

பயன்படுத்தப்படாத அரச தோட்டக்காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

செயலற்றுக் கிடக்கும் பொதுச் சொத்துக்களை உற்பத்தித்திறன் மிக்க பொருளாதார வாய்ப்புகளாக மாற்றுவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் 2025ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், காணிகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதையும், முதலீடுகளை ஈர்ப்பதையும், நாடு தழுவிய ரீதியில் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதன்படி, பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளதற்கமைய, இந்த புதிய கட்டத்தில் தோட்டக்காணிகள், தேயிலைத் தொழிற்சாலைகள், பங்களாக்கள், விவசாய-சுற்றுலா வலயங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாய முயற்சிகள் சார்ந்த முதலீட்டு வாய்ப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த முதலீட்டு வாய்ப்புகள் கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, மொனராகலை, கேகாலை மற்றும் காலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரந்து காணப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் விவசாய சுற்றுலா மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு, மசாலாப் பொருட்கள் பயிர்ச்செய்கை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,
தோட்டக் கட்டமைப்பு நவீனமயமாக்கல் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தித் தொழில்கள் போன்ற துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு கிடைக்கக்கூடிய சொத்துக்கள் 100 ஹெக்டேயருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட பெரிய தோட்டங்கள் முதல் சிறிய அளவிலான மூலோபாயக் காணித் துண்டுகள் வரை வெவ்வேறு அளவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் தோட்ட பங்களாக்கள் போன்ற தற்போதைய தொழில்சார் வசதிகளும் இதில் அடங்கும்.

இந்த முயற்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இரு தரப்பினரும் பங்கேற்க முடியும் என்பதுடன், இலங்கை பிரஜைகளும் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்ட நிறுவனங்களும் நீண்ட கால அபிவிருத்திப் பங்காளித்துவத்தில் ஈடுபடத் தகைமையுடையவர்களாவர்.

இத்திட்டத்தின் மூலம் பிராந்திய பொருளாதார சாத்தியக்கூறுகளை வெளிக்கொணரவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தோட்டப் பொருளாதாரத்தை நவீனமயமாக்கவும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இந்த முதலீட்டு வாய்ப்புகள் குறித்த மேலதிக விபரங்களை பெருந்தோட்ட அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் கொள்முதல் பிரிவின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.






Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All