Search

Rebecca

Jan 31, 2026

உள்ளூர்

கடற்றொழில் அமைச்சர் மற்றும் செயலாளர் இந்தோனேஷியா விஜயம்

இந்தோனேஷியாவின் பாலி (Bali) நகரில் நேற்று (30) ஆரம்பமான கரையோர நாடுகளின் கூட்டணியின் 30ஆவது அமர்வில் (30th Session of the Coastal States Alliance - CSA 030) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித கமல் ஜினதாச அவர்களும் விஜயம் செய்துள்ளனர்.

இந்து சமுத்திர வலயத்தைச் சேர்ந்த 12 கரையோர நாடுகளின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் 2026 ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.

இந்து சமுத்திர டூனா ஆணைக்குழுவின் (IOTC) கட்டமைப்பிற்குள், இடம்பெயரும் மீன் இனமான டூனா (சூரை) மீன் வளத்திற்காக நியாயமான, நிலைபேறான (Sustainable) மற்றும் விதிகள் சார்ந்த முகாமைத்துவத்தை ஊக்குவிப்பதே இச்சந்திப்பின் பிரதான நோக்கமாகும்.

இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், மலேசியா, மாலைத்தீவு, மடகஸ்கார், மொசாம்பிக், பாகிஸ்தான், சோமாலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இக்கூட்டணியின் அங்கத்துவ நாடுகளாகச் செயற்படுகின்றன.

இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழு பின்வரும் விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியது.

  • டூனா மீன் வளப் பாதுகாப்பு: சமுத்திரத்தில் சுதந்திரமாக இடம்பெயரும் மீன் இனமான டூனா மீன்களின் இருப்பைப் பாதுகாப்பதற்காக அங்கத்துவ நாடுகளுக்கிடையில் பொதுவான தூரநோக்கொன்றைக் கட்டியெழுப்பல்.

  • கூட்டு இணக்கப்பாடு: எதிர்காலத்தில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர டூனா ஆணைக்குழுவின் (IOTC) கூட்டங்களில், பிராந்திய கரையோர நாடுகளின் தேசிய நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் தொலைதூர நாடுகளுடன் (Distant Water Fishing Nations - DWFN) பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வலுவான அடித்தளமொன்றை அமைத்துக்கொள்ளல்.

  • ஒத்துழைப்பை விருத்தி செய்தல்: சமுத்திர வளங்களைப் பகிர்ந்தளித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் நாடுகளுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தல்.

இம்மாநாட்டின் பயனாக கரையோர நாடுகளின் கூட்டணியை (CSA) ஸ்தாபிப்பது தொடர்பான கூட்டுப் பிரகடனமொன்று வெளியிடப்படவுள்ளதுடன், 2026 ஜூன் மாதம் பாலி நகரிலேயே நடைபெறவுள்ள "Ocean Impact Summit 2026" உச்சிமாநாட்டில் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கைச்சாத்திடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நிலைபேறான கடற்றொழில் கைத்தொழிலைப் பேணுவதற்கு சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All