Rebecca
Nov 30, 2025
உள்ளூர்
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் ஸ்தாபிக்க ஜனாதிபதி ஆலோசனை
அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, அத்தியாவசிய சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில், பிரதமர் அலுவலகத்தை மையமாகக் கொண்டு 'அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம்' ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அனர்த்த நிலைமை தணிந்தவுடன் மக்களின் வாழ்க்கையை வழமைக்குத் திருப்புவதற்கு எடுக்கப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த அலுவலகத்தில் பின்வரும் அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் முப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கடமைகளுக்காக இணைக்கப்படவுள்ளனர்:
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு
விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சு
மற்றும் இவற்றின் கீழ் இயங்கும்:
இலங்கை புகையிரத திணைக்களம்
நீர்ப்பாசனத் திணைக்களம்
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை
இலங்கை மின்சார சபை
வீதி அபிவிருத்தி அதிகார சபை
இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம்
முப்படையினர்
இந்த அலுவலகமானது, மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் அனைத்து விடயங்களையும் ஒருங்கிணைத்து வசதிகளை வழங்கும் ஒரு கூட்டு நடவடிக்கை மையமாக செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








