Search

Rebecca

Dec 20, 2025

உள்ளூர்

தித்வா புயலினால் வன்னியில் ஏற்பட்ட பாதிப்புக்களை பட்டியலிட்ட ரவிகரன் எம்.பி!

தித்வா புயலினால் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பு விபரங்களை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் தரவுகளுடன் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை மிகவும் கடுமையாக தித்வாபுயலால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் குளச்சேதங்களுக்கான நிரந்தரத்தீர்வு, பொருத்தமற்ற வாழ்விட மக்களுக்கான மாற்று வாழ்விட ஏற்பாடு, கைவிடப்பட்ட குளங்களை பராமரித்தல், ஆற்றுப்படுக்கைகளை எல்லைப்படுத்தல், குளங்களை உரிய திணைக்களங்களிடம் பாரப்படுத்தல், வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்படும் கிராமங்கள் மற்றும் பிரதேசங்களுக்கான நிரந்தரத்தீர்வு, விவசாய வீதிகள் சீரமைப்பு, வெள்ளநீர்-உவர்நீர் கட்டுப்பாட்டு அணைகள் கட்டுமானம், நகர்ப்பகுதிகளுக்கான நிரந்தர வடிகாலமைப்பு நடைமுறைப்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கு அரசின் 2026ஆம் ஆண்டின் பாதீடு வாய்ப்பளிக்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ரூபாய் 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

2004 சுனாமிக்குப் பின்னர் இலங்கையில் அதிகளவு பாதிப்பை தித்வா புயல் ஏற்படுத்தி உள்ளது.

தித்வா புயலால் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்வு முற்றாக நிலைகுலைந்தது. வீதிப்போக்குவரத்து முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். மின்சாரம், தொலைத் தொடர்பு சேவைகள் சிலநாள்கள் செயலிழந்தன. 45 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வயல்நிலங்கள் 5 நாள்கள் அளவில் நீரில் மூழ்கின. ஐந்து நாள்களுக்கு மேலாக மீன்பிடி முற்றாக தடைப்பட்டது. 22918 குடும்பங்களைச் சேர்ந்த 67340 பேர் முல்லைத்தீவில் பாதிக்கப்பட்டனர். 40 இடைத்தங்கல் முகாம்களில் 1191 குடும்பங்களைச் சேர்ந்த 3591 பேர் பாதுகாக்கப்பட்டனர். 32 வீடுகள் முற்றாகவும் 1379 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன. 250 இற்கும் மேற்பட்ட கிலோமீற்றர் நீளம் கொண்ட 193 சாலைகள் சேதப்பட்டன. 5 மதகுகள், 30 பாலங்களில் சேதநிலைகள் இதுவரை அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளன.

13.12.2025 இன் படியாக 23641 குடும்பங்களைச் சேர்ந்த 77451 பேர் மன்னாரில் பாதிக்கப்பட்டனர். நால்வர் உயிரிழந்தனர். 88 பாதுகாப்பு நிலையங்களில் 5580 குடும்பங்களைச் சேர்ந்த 18088 பேர் பாதுகாக்கப்பட்டனர். 70 வீடுகள் முற்றாகவும் 1517 வீடுகள் பகுதியளவிலும் சேதப்பட்டன. 22ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் வயல்நிலம் பாதிப்படைந்தது. 45ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை மன்னார் நிலம் இழந்தது. 151 படகுகள் சேதமடைந்தன. பேரிடரின் தாக்கத்தில் இருந்து அனைவருமாய் மீள எழத்தக்க வகையில் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அது போல இனிவரும் காலத்தில் இத்தகைய இடர் வராதிருக்கும் வகையில் இடர்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வினைத்திறனான நீர் மேலாண்மையை பேணத்தக்க வகையில் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதும் இன்றியமையாதது.

  • குளச்சேதங்களுக்கான நிரந்தரத் தீர்வு.

  • பொருத்தமற்ற வாழ்விட மக்களுக்கான மாற்று வாழ்விட ஏற்பாடு

  • கைவிடப்பட்ட குளங்களைப் பராமரித்தல், ஆற்றுப்படுக்கைகளை எல்லைப்படுத்தல், குளங்களை உரிய திணைக்களங்களிடம் பாரப்படுத்தல்.

  • வெள்ளத்தால் தனிமைப்படுத்தபடும் கிராமங்கள் மற்றும் பிரதேசங்களுக்கான நிரந்தரத்தீர்வு

  • விவசாய வீதிகள் சீரமைப்பு

  • வெள்ளநீர்-உவர்நீர் கட்டுப்பாட்டு அணைகள் கட்டுமானம்

  • நகர்ப்பகுதிகளுக்கான நிரந்தர வடிகாலமைப்பு நடைமுறைப்படுத்தல்


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All