Search

admin

Jun 11, 2026

உள்ளூர்

காலி நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்!

பிரதான நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் காலி நகர அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

உலக மரபுரிமை நகரமான காலி நகரத்தை கலாசார மற்றும் சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராய்ந்த ஜனாதிபதி, அதனை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடினார்.

இதன்கீழ், காலி நகர மத்தியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையம், தபாலகம், சிறைச்சாலை மற்றும் தாதியர் பயிற்சிப் பாடசாலை ஆகியவற்றை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்குத் தேவையான காணிகளை விடுவிப்பது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

முறையான நகரத் திட்டத்தின் கீழ் காலி நகரை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நகரத்தைத் திட்டமிடுவதிலும், காலி கோட்டைக்கு வெளியே அரச நிறுவனங்களை நிறுவுவதிலும், கட்டிடங்கள், வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளைக் நிர்மாணிப்பதிலும், அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக நிலத்தை முழுமையாகப் பயன்படுத்துவதிலும் அனைத்து அரச நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒரு வீசேட பொறுப்பு உள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் புதிய நிர்மாணப்பணிகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

காலி கோட்டை மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்கரைப் பகுதியை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பிராந்தியமாக அபிவிருத்தி செய்வது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பொதுமக்கள் மிகவும் இலகுவாக சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில், காலி நகரிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களையும் ஒரே நிர்வாகக் கட்டிடத்தின் கீழ் கொண்டு வருதல், தற்போதுள்ள நுண்கலைப் பாடசாலையை அபிவிருத்தி செய்தல் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, பாராளுமன்ற உறுப்பினர்களான நிஷாந்த பெரேரா, டி.கே. ஜயசுந்தர, நிஷாந்த சமரவீர, ஹசாரா லியனகே, திலங்க யூ கமகே ஆகியோரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல்.பி. குமுதுலால், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.என். தினிப்ரிய, தேசிய நீர்வழங்கல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் வி. வாசுதேவன், தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.ஏ.ஆர். தரங்க, தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்சான், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு

அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் எஸ்.ஏ.கே. சுபசிங்க, நீர் வழங்கல் சபையின் மேலதிக பொது முகாமையாளர் பொறியியலாளர் என்.ஆர்.எஸ். விக்ரமசிங்க, தென் மாகாண பிரதம செயலாளர் சந்திம சி. முஹந்திரம்கே, தென் மாகாண முதலமைச்சர் அலுவலக செயலாளர் கிரிஷாந்த டபிள்யூ. மஹேந்திர, தென் மாகாண நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் துஷானி டி அல்விஸ், காலி மாவட்ட செயலாளர் கே.யு. சந்திரலால் உள்ளிட்ட நகர அபிவிருத்தி அதிகாரசபையின் காலி நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் அதிகாரிகளும் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All