Search

admin

Jun 25, 2026

உள்ளூர்

ஊழல், போதைப்பொருள், குற்றங்களுக்கு இரும்புக்கரம்! – ஜனாதிபதி

நாட்டில் நிலவும் ஊழல், திட்டமிடப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் அரச அனுசரணையுடன் இடம்பெற்ற அரசியல் குற்றங்கள் அனைத்தும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த முன்னின்று உழைக்கும் அரச அதிகாரிகள் இன்று எதிர்க்கட்சியினரால் பழிவாங்கப்பட்டு, 'எதிரிகளாக' சித்தரிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர , கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன , அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் திலீப் பீரிஸ் ஆகியோர் தத்தமது கடமைகளைச் சரியாகச் செய்வதாலேயே எதிர்க்கட்சியினரின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என ஜனாதிபதி தெரிவித்தார்.

"நீதிமன்றமும் இன்று எதிர்க்கட்சிக்கு எதிரியாகப் பார்க்கப்படுகிறது. நீதி, நியாயம் மற்றும் நல்லாட்சியைத் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை இன்று எதிர்க்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது" என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினரை அரசாங்கம் எப்போதும் கௌரவிக்கும் என உறுதியளித்த ஜனாதிபதி, எனினும் கடந்த காலங்களில் அரசியல் தேவைகளுக்காகவும், குறிப்பிட்ட சில குடும்பங்களின் அதிகாரத் தக்கவைப்பிற்காகவும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இராணுவத்தின் ஒரு சிறிய குழுவினருக்கு உரிய தண்டனை வழங்கியே தீர வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், அவர்கள் கடத்தப்பட்டமை என்பவற்றை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, இவற்றுக்குப் பின்னணியில் புலனாய்வுப் பிரிவின் சில தரப்புகள் பயன்படுத்தப்பட்டதாகத் தரவுகள் உள்ள நிலையில், அவற்றை மூடிமறைக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

ஒரு நாகரிகமான நாட்டை உருவாக்க வேண்டுமாயின், ஜனாதிபதி முதல் அடிமட்ட ஊழியர் வரை அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்களாக மாற வேண்டும் எனவும், கடந்த கால அநாகரிக ஆட்சியைத் தற்போதைய அரசு முற்றாக மாற்றியமைக்கும் எனவும் ஜனாதிபதி திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All