
admin
May 16, 2026
உள்ளூர்
இறால் வளர்ப்புத் துறைக்கு 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

நாட்டின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அதிக அறுவடை தரும் ஒரு வணிகத் துறையாக மாற்றியமைக்கும் நோக்கில், ஜனாதிபதியால் 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 25 மில்லியன் ரூபா நிதியின்கீழ் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கித்சிறி தர்மப்பிரிய தெரிவித்தார்.
இதுவரை பின்பற்றப்பட்ட பாரம்பரிய முறைக்கு மாற்றாக, இறால் குஞ்சுகளை (Post Larvae) நேரடியாக நீர்நிலைகளில் விடுவிக்காமல், அவற்றை நீர்த்தேக்கங்களுக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ள கூடுகளில் ஒரு மாதம் வரை வளர்த்து (Pre-growing), அதன் பின்னரே நீர்நிலைகளுக்குள் விடுவிப்பது இப்புதிய தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமாகும்.
இதற்கமைய, நன்னீர் இறால் வளர்க்கப்படும் பிரதான நீர்த்தேக்கங்களை மையப்படுத்தி, ஆராய்ச்சி மட்டத்திலான 25 கூடுகளை நிறுவுவதற்கு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இப்புதிய முறைமை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்துத் தலைவர் மேலும் விவரிக்கையில்:
"நாங்கள் ஏற்கனவே கிரித்தலை குளம், அனுராதபுர மாவட்டத்தின் இரண்டு குளங்கள் மற்றும் வட மாகாணத்தின் இரண்டு குளங்களில் இந்த ஆராய்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
முன்னைய முறையில், ஒரு கிலோ இறால் அறுவடையைப் பெறுவதற்கு சுமார் 300 முதல் 400 வரையான குஞ்சுகளை நீர்நிலைகளில் விட வேண்டியிருந்தது. ஆனால், இந்த புதிய 'கூடு முறை' மூலம் ஒரு மாத கால வளர்ச்சியின் பின்னர் சுமார் 1.5 - 2 அங்குல நீளம் வரை வளர்ந்த நிலையில் இறால்களை விடுவிப்பதால், 100 குஞ்சுகளைக் கொண்டே ஒரு கிலோ இறால் அறுவடையைப் பெற முடியும் என எதிர்பார்க்கிறோம்.
இது நன்னீர் இறால் வளர்ப்புத் துறையின் வினைத்திறனை மூன்று மடங்காக அதிகரிக்கும் ஒரு புரட்சிகரமான மாற்றமாகும்."
இவ்வேலைத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனியார் துறையினரும் மாகாண சபைகளும் இதில் ஆர்வத்துடன் பங்களிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, நன்னீர் இறால்களைக் கொள்வனவு செய்யும் வர்த்தகர்கள், இறால் குஞ்சுகள் மற்றும் அவற்றுக்கான உணவுகளை வழங்க முன்வந்துள்ளனர்.
அத்துடன் ஊவா மற்றும் தென் மாகாண சபைகள் இத்திட்டத்தை அந்தந்த மாகாணங்களில் விரிவுபடுத்தத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகத் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
இப்புதிய தொழில்நுட்பத் தலையீட்டின் மூலம் நன்னீர் மீனவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நுகர்வோருக்கு அதிகளவிலான நன்னீர் இறால் உற்பத்திகளை வழங்கவும் முடியும் என தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை எதிர்பார்க்கின்றது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





