Search

admin

May 12, 2026

உள்ளூர்

நாடளாவிய ரீதியில் 26 நீர்த்தேக்கங்கள் வான்பாய்கின்றன!

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார். 

அனுராதபுரத்தின் இராஜாங்கனை நீர்த்தேக்கம், பதுளை மாவட்டத்தின் சொரபொர நீர்த்தேக்கம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரவில, லுணுகம்வெஹெர, வெஹெரகல நீர்த்தேக்கங்கள், குருநாகல் மாவட்டத்தின் மாகல்ல, தெதுறு ஓயா நீர்த்தேக்கம் மற்றும் கண்டி மாவட்டத்தின் வாமெடில்ல, நாலந்த நீர்த்தேக்கங்களும் மொனராகலை மாவட்டத்தின் அலிகொட்டஆர நீர்த்தேக்கமும் இவ்வாறு வான்பாய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கலா ஓயா வடிநிலப் பகுதியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, அந்த வடிநிலத்தில் அமைந்துள்ள இராஜாங்கனை, தேவஹுவ, வெமெடில்ல ஆகிய நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்து வருவதாக எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் மேலும் தெரிவித்தார். 

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளனதுடன், அவற்றின் ஊடாக வினாடிக்கு 18,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. 

அதேபோல், கிரிந்தி ஓயா வடிநிலப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அந்த வடிநிலத்திலுள்ள லுணுகம்வெஹெர, திஸ்ஸவாவி, வீரவில, யோதவாவி மற்றும் அலிகொட்டஆர ஆகிய நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாகப் பணிப்பாளர் குறிப்பிட்டார். 

லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதுடன், வினாடிக்கு 7,100 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. 

மேலதிகமாக, வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 2,400 கன அடிக்கும் அதிகமான நீர் மாணிக்க கங்கைக்குள் வெளியேற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

வான்பாயும் நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களில் அங்கமுவ, போபுருஎல்ல, மஹாசியம்பலாங்கமுவ, சத்தாதிஸ்ஸ, மாலிம்பொத்த மற்றும் மருதமடு ஆகிய நீர்த்தேக்கங்கள் அடங்கும். 

தொடர்ந்து பெய்யும் மழையினால் வான்கதவுகள் ஊடாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வரும் நாட்களில் மாற்றமடையக்கூடும் என்பதால், நீர்த்தேக்கங்களை சூழவுள்ள பகுதிகளிலும் தாழ்நிலப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All